சுருக்கமாக
யாருக்குப் பொருந்தும்: Udyam இணையதளத்தில் பதிவு செய்த குறு, சிறு நிறுவனங்களிடமிருந்து பொருள் அல்லது சேவை வாங்கும் தொழில்கள்
- தகுதியுள்ள குறு அல்லது சிறு சப்ளையருக்கு, ஒப்புக்கொண்ட காலத்துக்குள் பணம் செலுத்த வேண்டும்; அந்தக் காலம் ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து அதிகபட்சம் 45 நாள். எழுத்துமூல ஒப்பந்தம் இல்லையென்றால் 15 நாளுக்குள்.
- தாமதமானால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவிக்கும் வங்கி விகிதத்தின் மூன்று மடங்கில் கூட்டு வட்டி கட்ட வேண்டும்; அந்த வட்டிக்கு வரிக் கழிவு கிடையாது.
- கெடு தாண்டிவிட்டால், அந்தச் செலவு உண்மையில் பணம் செலுத்திய ஆண்டில் மட்டுமே கழிவாகும்: பிரிவு 43B(h); வரி ஆண்டு 2026-27 முதல் பிரிவு 37(2)(g).
கொள்முதல் ஆணையில் “60 நாள் கடன்” அல்லது “90 நாள் கடன்” என்று இருக்கலாம். அதனால், தகுதியுள்ள குறு, சிறு நிறுவனத்துக்குப் பணம் செலுத்த வாங்குபவருக்குச் சட்டப்படி 60 அல்லது 90 நாள் உண்டு என்று பொருள் ஆகாது.
MSMED Act, 2006 (குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டுச் சட்டம்) பிரிவுகள் 15, 16, தகுதியுள்ள குறு, சிறு சப்ளையர்களுக்குத் தாமதமாகப் பணம் செலுத்துவதற்குத் தனிச் சட்ட வழிமுறையை வகுக்கின்றன. பணம் செலுத்தும் கெடு, வாங்குபவரின் வருமான வரிக் கழிவையும் பாதிக்கலாம். ஆனால் முதல் படி: அந்த சப்ளையரும் அந்தப் பரிவர்த்தனையும் இந்த விதிக்குள் வருகின்றனவா என்று உறுதி செய்வது.
எந்த சப்ளையர்கள் இதில் அடங்குவர்?
குறு அல்லது சிறு நிறுவனம் என்று கூறும் சப்ளையர்கள் பற்றி நம்பகமான தகவலைத் தொழில்கள் வைத்திருக்க வேண்டும்: அவர்களின் தற்போதைய வகைப்பாடு, Udyam விவரங்கள், தொழிலின் தன்மை, உரிய பதிவு ஆவணங்கள். 1 ஏப்ரல் 2025 முதல் நடைமுறையில் உள்ள MSME வரம்புகள்:
| வகைப்பாடு | முதலீடு | Turnover |
|---|---|---|
| குறு | ₹2.5 கோடி வரை | ₹10 கோடி வரை |
| சிறு | ₹25 கோடி வரை | ₹100 கோடி வரை |
| நடுத்தர | ₹125 கோடி வரை | ₹500 கோடி வரை |
MSMED சட்டத்தின் அத்தியாயம் V-இல் உள்ள தாமதக் கட்டண விதிகள் குறு, சிறு நிறுவனங்களுக்கு மட்டுமே; நடுத்தர நிறுவனங்களுக்கு அல்ல. உற்பத்தி அல்லது சேவையில் ஈடுபட்டு, குறு அல்லது சிறு நிறுவனமாகப் பதிவு செய்த சப்ளையர்களுக்கு இவை பொருந்தும். வியாபாரிகளாக (traders) மட்டும் பதிவு செய்தவர்கள் பொதுவாக இந்த விதிக்கு வெளியே கருதப்படுகின்றனர்.
ஒரு சப்ளையர் தகுதியானவரா என்பதில், குறிப்பாகப் பதிவுத் தேதிகள், தொழிலின் தன்மை பற்றி, உண்மை சார்ந்த, சட்டம் சார்ந்த கேள்விகள் எழலாம். இன்வாய்ஸில் “MSME registered” என்று இருப்பதால் மட்டுமே ஏற்றுக்கொள்ளாமல், அவற்றைச் சரிபார்க்க வேண்டும்.
வாங்குபவருக்குப் பணம் செலுத்த எவ்வளவு காலம் உண்டு?
எழுத்துமூல ஒப்பந்தம் உள்ள பரிவர்த்தனைகளையும் இல்லாதவற்றையும் பிரிவு 15 தனித்தனியாகக் கையாள்கிறது.
எழுத்துமூல ஒப்பந்தம் இருந்தால்
வாங்குபவரும் சப்ளையரும் ஒப்புக்கொண்ட தேதியில் அல்லது அதற்கு முன் பணம் செலுத்த வேண்டும். ஆனால் ஒப்புக்கொண்ட காலம், ஏற்றுக்கொண்ட அல்லது ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும் நாளிலிருந்து 45 நாளைத் தாண்டக் கூடாது. அதனால் ஒப்பந்தத்தில் 60 அல்லது 90 நாள் என்று இருந்தாலும், சட்ட வரம்பு 45 நாளைத் தாண்டி நீளாது.
எழுத்துமூல ஒப்பந்தம் இல்லையென்றால்
சட்டம் குறிப்பிடும் நாளுக்கு (appointed day) முன் பணம் செலுத்த வேண்டும்; அந்த நாள், ஏற்றுக்கொண்ட அல்லது ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும் நாளுடன் இணைக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் இது 15 நாள் வரம்பு.
இன்வாய்ஸ் தேதியை மட்டும் பார்ப்பது ஏன் தவறாக வழிநடத்தும்
சட்டம் கணக்கிடுவது ஏற்றுக்கொண்ட அல்லது ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும் நாளிலிருந்து; சப்ளையரின் இன்வாய்ஸில் உள்ள தேதியிலிருந்து மட்டும் அல்ல. பொருள் அல்லது சேவை பற்றி வாங்குபவர் 15 நாளுக்குள் எழுத்துமூல ஆட்சேபனை தெரிவிக்காவிட்டால், டெலிவரி நாளே ஏற்றுக்கொண்ட நாள். ஆட்சேபனை தெரிவித்தால், அது தீர்க்கப்பட்ட நாளே ஏற்றுக்கொண்ட நாள்.
அதனால், குறு, சிறு சப்ளையர்களுக்கான பணப் பதிவேட்டில் இன்வாய்ஸ் தேதி, பணம் செலுத்திய தேதி மட்டுமல்லாமல், டெலிவரி அல்லது சேவை முடிந்த தேதி, எழுத்துமூல ஆட்சேபனைகள், அவை எப்படித் தீர்க்கப்பட்டன என்பதையும் வைத்திருக்க வேண்டும்.
பணம் தாமதமானால் என்ன ஆகும்?
பிரிவு 15-இல் கூறியபடி பணம் செலுத்தப்படாவிட்டால், RBI அறிவிக்கும் வங்கி விகிதத்தின் மூன்று மடங்கில், மாதாந்திரக் கூட்டு வட்டி (ஒவ்வொரு மாதமும் வட்டி நிலுவைத் தொகையுடன் சேர்க்கப்படும்) கட்ட வாங்குபவர் பொறுப்பாவார்.
காலத்தை எழுத்துமூல ஒப்பந்தம் நிர்ணயிக்காவிட்டால், சட்டம் குறிப்பிடும் நாளிலிருந்து வட்டி தொடங்கும். எழுத்துமூலமாக ஒப்புக்கொண்ட தேதி இருந்தால், பிரிவு 15-இன் சட்ட வரம்புக்கு உட்பட்டு, அந்தத் தேதிக்கு அடுத்த நாளிலிருந்து வட்டி தொடங்கும். RBI வங்கி விகிதம் மாறக்கூடும் என்பதால், தாமத காலத்தில் விகிதம் மாறியிருந்தால், இன்றைய விகிதத்தில் கணக்கிடும் வட்டி ஒரு மதிப்பீடு மட்டுமே.
அந்த வட்டிக்கே வரிக் கழிவு கிடையாது
சட்டப்படியான வட்டியின் வரி நிலையை MSMED சட்டம் தனியாகக் கூறுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் வாங்குபவர் செலுத்த வேண்டிய அல்லது செலுத்திய வட்டி, வருமானக் கணக்கீட்டில் கழிவாக அனுமதிக்கப்படாது என்று பிரிவு 23 கூறுகிறது. இதை, அடிப்படைக் கொள்முதல் அல்லது செலவின் வரி நிலையிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும்.
அடிப்படைச் செலவுக்கு வருமான வரியில் என்ன ஆகும்?
நிதியாண்டு (FY) 2025-26-க்கு, அதாவது மதிப்பீட்டு ஆண்டு (AY) 2026-27-க்கு, வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 43B(h) பொருந்தும். MSMED சட்டப் பிரிவு 15 அனுமதிக்கும் காலத்தைத் தாண்டிக் குறு அல்லது சிறு நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை, உண்மையில் செலுத்தும்போது மட்டுமே கழிவாகும் என்று பிரிவு 43B(h) கூறுகிறது.
பிரிவு 43B-இன் மற்ற பெரும்பாலான இனங்களைப் போல் அல்லாமல், வருமான வரி ரிட்டர்ன் கெடுவுக்கு முன் செலுத்தினால் கிடைக்கும் வழக்கமான சலுகை, உட்பிரிவு (h)-க்குக் கிடையாது என்று வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது. வரி ஆண்டு 2026-27 முதல், அதாவது 1 ஏப்ரல் 2026 முதல், இதற்கு இணையான விதி வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 37(2)(g)-இல் உள்ளது. வருமான வரித் துறையின் சொந்த MSME வழிகாட்டியும் பிரிவு 43B(h)-ஐப் பிரிவு 37(2)(g)-உடன் இணைக்கிறது.
அதனால் நடைமுறைப் பிரச்சினை அதேதான்: MSMED சட்டப்படியான கெடு தாண்டிவிட்டால், உண்மையில் பணம் செலுத்தும் நேரமே கழிவுக்கு முக்கியம்.
உதாரணம் 1: தாமதம், ஆனால் ஆண்டு முடிவதற்கு முன் செலுத்தியது
வேறு வகையில் கழிவுக்குத் தகுதியான ஒரு செலவு என்று வைத்துக்கொள்வோம். MSMED கெடு மார்ச்சில் முடிகிறது; ஆனால் நிதியாண்டு முடிவதற்கு முன், மார்ச்சிலேயே பின்னர் வாங்குபவர் பணம் செலுத்துகிறார். MSMED சட்டப்படி அது தாமதமாகவே இருக்கலாம்; சட்டப்படியான வட்டியும் எழலாம்.
ஆனால் அதே நிதியாண்டுக்குள் பணம் செலுத்தப்பட்டதால், கெடு தாண்டியது என்ற ஒரே காரணத்துக்காகக் கழிவு அடுத்த ஆண்டுக்கு நகர வேண்டியதில்லை. அதனால் பணம் செலுத்தும் சட்டத்தின் விளைவையும், வரி ஆண்டின் விளைவையும் தனித்தனியாகக் காட்ட வேண்டும்.
உதாரணம் 2: பணம் அடுத்த ஆண்டுக்குச் செல்கிறது
இப்போது, சட்டப்படியான கெடு மார்ச் 31-க்கு முன்பே முடிந்துவிட்டது; ஆண்டு முடிவில் தொகை நிலுவையில் உள்ளது; இறுதியாக ஏப்ரலில் செலுத்தப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். வருமான வரி விதியின் மற்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கழிவு உண்மையில் பணம் செலுத்திய ஆண்டுக்கு நகரும். ரிட்டர்ன் கெடுவுக்கு முன் ஏப்ரலில் செலுத்தினாலும், கழிவு முந்தைய ஆண்டுக்குத் திரும்பி வராது.
உதாரணம் 3: மார்ச் 31 அன்று இன்வாய்ஸ் இன்னும் MSMED கெடுவுக்குள் உள்ளது
செல்லுபடியான 45 நாள் எழுத்துமூலக் காலத்தின் கீழ், பொருள் மார்ச் 20 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். மார்ச் 31 அன்று சட்டப்படியான காலம் இன்னும் முடியவில்லை. ஆண்டு முடிவில் நிலுவையில் உள்ளது என்பதற்காக மட்டும் அந்த இன்வாய்ஸை ஏற்கனவே அனுமதிக்கப்படாததாகக் கருதக் கூடாது. பொருந்தும் பிரிவு 15 காலத்துக்குள் பின்னர் பணம் செலுத்தப்படுகிறதா என்பதைப் பொறுத்தே அதன் இறுதி நிலை அமையும்.
அதனால்தான் “மார்ச் 31 அன்று நிலுவை” என்பதும் “MSMED சட்டப்படி கெடு தாண்டியது” என்பதும் ஒன்றல்ல.
ஒரு தொழில் எதைக் கண்காணிக்க வேண்டும்?
குறு, சிறு சப்ளையர்களுக்கான பணப் பரிவர்த்தனைகளில் பயனுள்ள கட்டுப்பாடு, நான்கு தகவல் தொகுப்புகளை இணைக்க வேண்டும்:
சப்ளையர் நிலை: வகைப்பாடு, அதற்கான பதிவு விவரங்கள்.
ஏற்றுக்கொள்ளல்: டெலிவரி அல்லது சேவை முடிவு; பொருந்தினால் எழுத்துமூல ஆட்சேபனையும் தீர்வும்.
பணம்: சட்டப்படியான கெடு, நிலுவைத் தொகை, உண்மையில் செலுத்திய தேதி.
வரி: கெடு தாண்டியதா, உண்மையில் பணம் செலுத்தியது எந்த ஆண்டில்.
நிறுவனங்கள் (companies), படிவம் MSME-1 (குறு, சிறு நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டியவை பற்றிய அரையாண்டு ரிட்டர்ன்), நிதி அறிக்கை வெளிப்படுத்தல் தேவைகளைத் தனியாக மதிப்பிட வேண்டும்; அவை தூண்டப்படும் நிலைகள், வருமான வரி அனுமதி மறுப்புச் சோதனையுடன் ஒன்றல்ல.
2026 MSMED திருத்தச் சட்டம் பற்றி ஒரு குறிப்பு
MSMED (Amendment) Act, 2026-க்கு 13 ஆகஸ்ட் 2026 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
12 அக்டோபர் 2026 தேதியிட்ட S.O. 5575(E), திருத்தப் பிரிவுகள் 2–7, 11, 13–17-ஐ 15 அக்டோபர் 2026 முதல் நடைமுறைக்குக் கொண்டுவருகிறது. உதவி மன்றத்தின் (Facilitation Council) அமைப்பை மாற்றும் திருத்தப் பிரிவு 12, 15 டிசம்பர் 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. பிரிவுகள் 8–10 இந்த அறிவிப்பின் மூலம் தொடங்கப்படவில்லை.
நடைமுறைக்கு வந்த மாற்றங்கள்: வகைப்பாடு, பதிவு, மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் TReDS மூலம் தீர்வு, மன்றம் அமைத்தல், வெளிப்படுத்தல்கள், அபராதங்கள். இங்கே பயன்படுத்தும் பிரிவு 15 பணக் காலங்களையோ பிரிவு 16 வட்டிக் கணக்கீட்டையோ அவை மாற்றவில்லை. அதனால் சரிபார்ப்புக் கருவியின் 15/45 நாள், மாதாந்திரக் கூட்டு வட்டிச் சூத்திரங்கள் மாறவில்லை; தனியான TReDS கடமைகளை அது மதிப்பிடுவதில்லை.
நடைமுறையில்
குறு அல்லது சிறு சப்ளையருக்கான ஒவ்வொரு பணத்துக்கும் கேட்க வேண்டிய கேள்வி இது மட்டும் அல்ல:
“இன்வாய்ஸ் 45 நாளை விடப் பழையதா?”
சிறந்த வரிசை இது:
சப்ளையர் தகுதி → ஏற்றுக்கொண்ட தேதி → எழுத்துமூல ஒப்பந்தம் → சட்டப்படியான கெடு → உண்மையில் செலுத்தியது → வட்டி → கழிவு ஆண்டு.
ஒவ்வொரு இன்வாய்ஸையும் இந்த வரிசையில் சரிபாருங்கள். MSME பணம் செலுத்தும் சரிபார்ப்புக் கருவியும் (ஆங்கிலம்) இதே வரிசையைப் பின்பற்றுகிறது.
இந்தக் கட்டுரையை நம்பிச் செயல்படும் முன்: இது MSMED சட்டப் பிரிவுகள் 15, 16, 23, வருமான வரிச் சட்டம், 1961-இன் பிரிவு 43B(h), வருமான வரிச் சட்டம், 2025-இன் பிரிவு 37(2)(g) எல்லாவற்றையும் பின்பற்றுகிறது. ஒரு சப்ளையர் இதில் அடங்குவாரா, ஏற்றுக்கொண்ட தேதி எது என்பவை ஒவ்வொரு இன்வாய்ஸின் உண்மை நிலையைப் பொறுத்தவை.
ஆதாரங்கள் (ஆங்கிலத்தில்)
Official sources: commencement notification S.O. 5575(E) and MSMED Amendment Act, 2026 .
- Udyam Registration portal, Ministry of MSME
- Income-tax Act, 2025, as amended by the Finance Act, 2026, Income Tax Department
- Section 43B of the Income-tax Act, 1961, including clause (h), Income Tax Department
- Micro, Small and Medium Enterprises Development Act, 2006 (Sections 15, 16 and 23), Ministry of MSME
இந்தக் கட்டுரை பொதுத் தகவலுக்கு மட்டுமே; தொழில்முறை ஆலோசனை அல்ல. இதன்படி செயல்படும் முன் தகுதியுள்ள நிபுணரை அணுகுங்கள்.
உங்கள் கணக்குகளை நாங்கள் பார்க்க வேண்டுமா?
உங்கள் நிலையைச் சொல்லுங்கள். ஒரு வேலை நாளுக்குள் தமிழிலோ ஆங்கிலத்திலோ பதில் தருகிறோம்.
சுருக்கமான விளக்கம் திறக்கும்